யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக சேர்த்து edit செய்து உருவாக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.

விரிவான விளக்கம்
காணொளியின் முதல் காட்சியில், குழுவாக நடந்து செல்லும் மாணவிகளிடம் இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒருவன் பாலியல் வன்செயலில் ஈடுபடுபட்டுவிட்டு தப்பிச் செல்கிறான். அடுத்த காட்சியில், குற்றவாளி ஒருவனை காவல்துறையினர் தெரு வழியே அடித்து இழுத்துச் செல்கிறார்கள். இந்த இரண்டு காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாகவும், அதற்காக அப்துலை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்து அடித்து இழுத்துச் செல்வதாகவும்’ சமூக வலைதளத்தில் பரப்புகின்றனர்.
உண்மை என்ன:
மாணவிகளிடம் ஒருவன் பாலியல் வன்செயலில் ஈடுபடும் காட்சியின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’Sakal’ என்ற யூட்பூப் தளத்தில் இதே வீடியோவைக் காணமுடிந்தது. அதன் தலைப்பில் ‘பிரபானி’ என்று மராத்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Dainik Ekmat’ என்ற இந்தி இணையப் பத்திரிகையில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, மஹாராஷ்டிராவில் செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கல்லூரியில் இருந்து அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த போது, ’முகமது அஸ்லாம் முகம்மது சலீம்’ என்பவன் இரு சக்கர வாகனத்தில் வந்து மாணவிகளிடம் பாலியல் வன்செயலில் ஈடுபட்டுள்ளான். பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும், குற்றவாளியை காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் காட்சியின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘NEWS 21’ என்ற யூட்யூப் தளத்தில் ”கதர்வரா - 40 ஆயிரம் பணத்திற்காக மதுர் சௌராசியா என்பவர் கொலை செய்யப்பட்டார்” என்ற தலைப்பிடப்பட்ட வீடியோவைக் காணமுடிந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Nava Bharat’ என்ற இந்தி இணையப் பத்திரிகையில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தின் ’கதர்வரா’ என்னும் பகுதியில் 40000 ரூபாய் பணம் சம்பந்தப்பட்ட தகராறில் மதுர் சௌராசியா என்பவர் விகாஷ் நீரஸால் கொல்லப்பட்டார் என்பது தெரியவருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விகாஷ் நீரஸை சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்படி கைது செய்து அடித்து இழுத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிதான் இது என்பது நிரூபணமாகிறது. மேலும், இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடக்கவில்லை என்பதும், மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் வெவ்வேறானது என்பதும் நிரூபணமாகிறது.
முடிவு:
இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக சேர்த்து edit செய்து, திரித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.